நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள கோரிக்கை!

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி உட்பட்ட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது ஜனாதிபதி தமது கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளித்ததாகவும், இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளித்ததாகவும் பதியுதீன் கூறியுள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியானது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்டது. அத்துடன் அதற்கான பொறுப்பை எந்த வகையிலும் தகுதியற்ற ஒருவரிடம் ஒப்படைத்ததாகவும் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார். அவரும், தாம் விரும்பியவாறு ஒரு அறிக்கையை தயாரித்து ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் சமர்ப்பித்ததாக ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் நாட்டில் இனவாதத்தையும் வகுப்புவாதத்தையும் ஊக்குவித்தது. நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் அரச நிர்வாகத்தில் இனவாத சக்திகளின் தலையீடு தடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிலையில், நாட்டின் வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் சர்வகட்சி அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள எதிர்கால திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு தமது பூரண ஆதரவை வழங்க தயாராக உள்ளதாக ரிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor