களுத்துறை பிரதேசத்தில் மாணவியொருவர் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை 48 மணிநேரம் பொலிஸாரிடம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய களுத்துறை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
களுத்துறையில் மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை இன்றைய தினம் (10.05.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்றைய தினம் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பின் போது சிக்கியிருந்தார்.
இதனையடுத்து அவரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், “தன்னுடன் இருந்த போது குறித்த சிறுமிக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அத்துடன் தான் இன்று வீட்டிற்கு சென்றால் மாட்டிக் கொள்ள போவதாகவும் சிறுமி கூறியதாக” சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தீவிரப்படுத்தப்படும் விசாரணை
குறித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உயிரிழந்த மாணவியின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
என்ற போதும் சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகம் இருப்பதால், பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.