அரசாங்க ஊழியர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 500,000 பேர் வெளிநாடு செல்ல தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களை வெளிநாடு அனுப்பும் பொறுப்பு மனிதவளம் மற்றும் பாதுகாப்பு துறையிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கம் மேலும் சிக்கலில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அரச உத்தியோகத்தர்களின் முறைப்பாடு
தம்மை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு உரிய வேலைத்திட்டத்தை மனிதவள பாதுகாப்பு திணைக்களம் இதுவரையில் உரிய முறையில் தயாரிக்கவில்லை என சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் தற்போது முறைப்பாடு செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அரச ஊழியர்களின் சுமையை குறைக்கும் நோக்கில் இந்த வருட இறுதிக்குள் குறைந்தபட்சம் ஐயாயிரம் ஊழியர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப மனிதவள மற்றும் பாதுகாப்பு திணைக்களம் எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, வெளிநாட்டில் வேலை தேடக்கூடிய அரசாங்க ஊழியர்களுக்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறான அங்கீகாரம் பெற்ற எந்தவொரு அரச ஊழியர்களும் இதுவரை வெளிநாடு செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் வெளிநாடு செல்வதற்கான அனுமதி
இதேவேளை, வெளிநாடு செல்வதற்கான அனுமதி கோரி ஆசிரியர்கள் பலரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அந்தந்த பிராந்திய கல்வி அலுவலகங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஆசிரியர்கள் தற்போது கல்வி அமைச்சிடம் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.