தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்ப துறைகளில் வேலைவாய்ப்பு இருப்பதாக கூறி போலி நிறுவனங்கள் இலங்கையர்களை ஏமாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தாய்லாந்திற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த போலி நிறுவனங்கள் இலங்கையர்களை தாய்லாந்து எல்லை ஊடாக மியன்மார் போன்ற நாடுகளுக்கு கொண்டு சென்று அடிமையாக வைத்து வேலை வாங்குவதாகவும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வாறு மியன்மாருக்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையர்கள் சிலர் சட்டவிரோதமாக நுழைந்தமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்றிதருவோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே இவர்கள் தாய்லாந்திற்கு அழைத்துவரப்பட்டார்கள் இருப்பினும் அது இடம்பெறவில்லை என தெரிவித்துள்ள தூதரகம் இலங்கையர்களை இவ்வாறான போலி வேலைவாய்ப்புகளை நம்பவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.