உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் இழுபறி நிலையில் உள்ளதால் விடுமுறையில் உள்ள அரச ஊழியர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு, நிதியமைச்சு ஆகிய தரப்பினரது முரண்பாடான செயற்பாடுகளினால் வேட்பு மனு தாக்கல் செய்து விடுமுறையில் உள்ள அரச ஊழியர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தேர்தல் சட்டத்தின் 102ஆவது உறுப்புரையில் ‘தேர்தல் ஒன்றுக்கு போட்டியிட தீர்மானிக்கும் அரச ஊழியர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து, தேர்தல் பணிகள் நிறைவு பெறும் வரை சேவையில் ஈடுபடக்கூடாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுமுறையில் உள்ள அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
தேர்தல் இழுபறி நிலையில் உள்ள பின்னணியில் விடுமுறையில் உள்ள அரச ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தை மாத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போதைய பொருளாதார பாதிப்பு, வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் அடிப்படை சம்பளத்தை கொண்டு எவ்வாறு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
அரசியலமைப்புக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்ய வேண்டும். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டினால் அரச ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.என தெரிவித்துள்ளார்.