குணமடைந்தும் வீடுகளுக்குச் செல்லாமல் தங்கியிருக்கும் வயோதிப நோயாளர்களால் நாளாந்த வைத்தியசாலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்சான் பெல்லென தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (18.04.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இன்றி அதிகளவான நோயாளர்கள் தங்கியிருப்பதால் மருத்துவமனை நிர்வாகத்திற்கு மேலதிக செலவுகள் ஏற்பட்டுள்ளது.
பொறுப்பேற்க எவரும் வருவதில்லை
இவ்வாறு தினமும் சுமார் ஐந்து பேர் வரை குணமடைந்து வைத்தியசாலையில் தங்கியிருப்பதாகக் கூறியுள்ளார்.
நோயாளர் காவு வண்டியின் ஊடாக பல வயோதிப நோயாளர்கள் சிகிச்சைகளுக்காக அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்திருப்பினும், பொறுப்பேற்க எவரும் வருவதில்லை.
இவ்வாறு வைத்தியசாலையில் எவரேனும் தங்கியிருப்பின் அவர்களை, வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுமாறும் வைத்தியர் ருக்சான் பெல்லென கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூகப் பாதுகாப்பு அமைச்சு
மேலும், நோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்க வேண்டியது மருத்துவமனையின் பொறுப்பாகும். குணமடைந்ததன் பின்னர் அது தொடர்பான பொறுப்புக்கூறலை ஏற்க வேண்டியது சமூகப் பாதுகாப்பு அமைச்சுக்குரியதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை உட்பட மேலும் பல முக்கிய வைத்தியசாலைகளிலும் இந்த நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.