கடந்த 3 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மக்கள் தமிழ் – சிங்கள புத்தாண்டை இம்முறை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர் எனவும் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றதனாலே அது சாத்தியமாகியது என்றும் ஐக்கிய தேசிய கட்சி பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அதனால் இந்த வருட புத்தாண்டு ஆணழகன் ரணில் விக்ரமசிங்க ஆவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த அரசாங்கத்துக்கு எந்த ஒத்துழைப்பையும் வழங்கப் போவதில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்திருப்பதன் மூலம் அவர் நாட்டு மக்களுக்கான நிவாரண பணிகளை மறுக்கிறார் எனவும் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமாக சிறிகொத்தவில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ரங்கே பண்டார இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு வீழ்ச்சியடைந்திருந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள பொறுப்பானவர்கள் யாரும் முன்வரவில்லை.
ஆனால், ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு எந்த நிபந்தனையும் இல்லாமல் நாட்டை பொறுப்பேற்றார். மேலும், இந்த அரசாங்கத்துக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்து வருகிறார். அப்படியானால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்