இலங்கையில் கடுமையான பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து மீள்வது போன்ற ஓர் தோற்றப்பாட்டை வெளிப்படுத்த ஜனாதிபதி ரணில் முயற்சிப்பதாகவும், ஆனால் இலங்கை வெகு விரைவில் மீண்டும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் செல்லும் நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M.A Sumanthiran) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மக்கள் போராட்டங்கள் மீண்டும் தோற்றம் பெறுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் வடமராட்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.
எனவே மக்கள் போராட்டங்கள் இடம்பெறும்போது அவற்றை கட்டுப்படுத்துவதற்கு தற்பொழுது ஜனாதிபதியின் கைகளில் இருக்கின்ற சட்டங்கள் போதாது என்பதால், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டுவருவதற்கு முயற்சிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடு என்ற பொய்யான போர்வையில் இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதாகவும், இதன் உண்மையான நோக்கம் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும்போது, அவர்களை இரும்பு கரங்களால் அடக்குவதே ஆகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.