நாட்டின் பொருளாதாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் தலை நிமிர்கின்றது

அதலபாதாளத்தில் கிடந்த பொருளாதாரம் ஜனாதிபதியின் முயற்சியால் தலைநிமிர்கிறது.

ஓரவஞ்சனை அரசியலை எதிர்க்கட்சி கைவிட வேண்டும். அமைச்சர் நஸீர் அஹமட்

ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க நாட்டைப் பாரமெடுத்து ஒன்பது மாதங்களாகின்ற நிலையில், எதையும் செய்யவில்லை என்ற எதிர்க் கட்சியினரின்  விமர்சனங்களை நிராகரித்த  சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், ஓரளவாவது பொருளாதாரம் சீராகச் செல்கின்ற நிலைமையை ரணில் விக்ரமசிங்கவே  ஏற்படுத்தியதாகத் தெரிவித்தார். ஜனாதிபதியின்   அக்கிராசன உரை தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு பேசிய அமைச்சர் தெரிவித்ததாவது,

பொருளாதாரம் அதலபாதாளத்தில் கிடந்த நிலையில், நாட்டைப் பாரமெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாசவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அழைப்பு விடுத்தார். பாரிய புரட்சி வெடிக்குமோ என்ற அச்சத்தில் அவர், இந்த அழைப்பை ஏற்கவில்லை.எனினும்,துணிச்சலாக இந்நாட்டைப் பாரமெடுத்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. திறைசேரியில் பணமில்லாதிருந்தது. எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிகளால் நாடு இருளில் மூழ்கிக்கிடந்தது. எம்பிக்கள், பாராளுமன்றத்துக்கு வருவதற்கு  அச்சமடைந்த சூழலில்தான் ரணில் விக்ரமசிங்க நமது நாட்டைப் பாரமெடுத்தார். இப்போது நிலைமைகள் படிப்படியாக வளர்ந்து வருகின்றன.

அமெரிக்கா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உதவி வழங்க முன்வந்துள்ளன.பரிஸ் கிளபிலுள்ள நாடுகள் கூட எமது நாட்டுக்கு உதவத் தயாராகின்றன. சர்வதேச நாணய நிதியம் கடன் அடிப்படையில் உதவுவதற்கான சகல ஏற்பாடுகளையும் நிறைவு செய்திருக்கிறது. நாட்டுக்கு விஜயம் செய்த பான்கீமூன் மற்றும் பெற்றீசியாஸ்கொட்லண்ட் ஆகியோரும் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவ உள்ளனர்.இந்த முன்னேற்றங்களின் யதார்த்தத்தை எவரும் மறந்து பேச முடியாது.

இன்றைய நிலையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்கள் பற்றிப் பேசப்படுகிறது.13 ஆவது திருத்தம் தமிழர்களை மட்டும் திருப்திப்படுத்துவதற்கு அமுல்படுத்தக்கூடாது. முஸ்லிம்களும் இதில் திருப்தியடைய வேண்டும். இத்திருத்தம் வந்த பின்னர்தான்,மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் காணிகள் பறிபோகின. இம்மாவட்டத்தில் 27 வீதமாகவுள்ள முஸ்லிம்களுக்கு நான்கு பிரதேச சபைகளே உள்ளன.அதுவும் இவை,1,7 வீதக் காணிகளுக்குள் சுருக்கப்பட்டுள்ளன.இவற்றுக்கும் தீர்வு வேணும். தேர்தலை நடத்துவதற்கான சூழலில் நாடு இல்லை. எல்லோருமாக ஒன்றிணைந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முன்வருவது அவசியம்.பொருளாதாரம் பலமடைந்த பின்னர் ஏனையவை பற்றிப் பேசலாம் என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor