கல்முனை பகுதியிலுள்ள நபரொருவரிடம் அரச வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 702000 ரூபா பணத்தினை வங்கி மூலமாக பரிமாறிக்கொண்ட பெண்ணொருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் ரொட்டவெவ- மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணொருவர் கைது
கடந்த ஒன்பதாம் திகதி கல்முனை பொலிஸ் நிலையத்தில் அரச வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இரண்டு வங்கி கணக்குகளுக்கு 702000 ரூபாய் பணம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இது போலியாக இருவர் சேர்ந்து மேற்கொண்ட மோசடி எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கல்முனை பொலிஸார் பணம் அனுப்பி வைக்கப்பட்ட வங்கி விபரங்களை அடிப்படையாக கொண்டு குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றைய தினம் கல்முனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.