ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் சயனைட் உடலுக்குள் கலந்ததால் ஏற்பட்டுள்ளது என கொழும்பு, புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (08.02.2023) தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் ஷாப்டர்,கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழக்கவில்லை என்றும் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான உண்மைகளை, கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் நேற்று சமர்ப்பித்துள்ளனர்.
வெளிவந்த புதிய தகவல்கள்
இதனிடையே ஷாப்டரின் ஐபோன், எக்ஸ் எஸ் வகை தொலைபேசி மற்றும் ஐபேட் ஆகியவற்றின் தரவுகளை ஆய்வு செய்ததில் பல முக்கிய உண்மைகள் தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அதன்படி ஷாப்டர் தனது மனைவி மற்றும் மனைவியின் பெற்றோருக்காக தயாரிக்கப்பட்ட பல ஆவணங்களை சம்பந்தப்பட்ட தொலைபேசி மற்றும் ஐபேடில் கண்டுபிடித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை ஷாப்டரின் ஐ-பேடில் ஆப்பிள் நோட்டில், தரவு பட்டியல் என்ற கட்டுரை இருந்ததாகவும் அதில் KCM மற்றும் ZIP TIE எனப்படும் வார்த்தைகளும் மற்றும் பல பொருட்களின் பட்டியலும் இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சயனைட் என்பது KCM என்ற குறுகிய பெயரிலும், ZIP TIE என்பது எதையாவது கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டேப் என்றும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், THE LIST என்ற மற்றொரு பட்டியல் இருந்ததாகவும், அதில் 5 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பட்டியலில் ஐந்து பேர்
குறித்த பட்டியலில் முத்துக்குமாரண, ஜகத் செனவிரத்ன, ஜயரத்ன, அன்டன் ஹேமந்த மற்றும் எலியன் குணவர்தன ஆகியோரின் பெயர்கள் உள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளது.
அந்த நபர்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் முகவரிகளும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஐந்து பெயர்களில் கடைசி நான்கு பெயர்களில் ‘அழிக்கும் நோக்கம் அடங்கிய வாக்கியம்’ இருப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பிரையன் தாமஸின் புகைப்படங்கள் அடங்கிய PDF கோப்பும் iPadல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜோசபின் தாமஸ் மற்றும் கிறிஸ்டியன் தாமஸ் ஆகியோரின் பெயர்களும் அதில் உள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
‘MOST IMPORTANT WHO IS BEHIND B.T. GET MY MONEY BACK’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, தினேஷ் ஷாப்டர் தனது இருப்பிடத்தை தனது செயலாளருக்கு அனுப்பி வைத்து, பொரளை பொது மயானம் என குறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
தொலைபேசி அழைப்பு விபரங்கள்
இதற்கிடையில், பிரையன் தாமஸின் தொலைப்பேசியும் சோதனை செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, டிசம்பர் 25, 2019 முதல் டிசம்பர் 15, 2022 வரை, தினேஷ் ஷாப்டருக்கும், பிரையன் தாமஸுக்கும் இடையே அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
இதற்கிடையில், ஷாப்டர் இறந்த நாளில், பிற்பகல் 2:48:50 மணிக்கு, பிரையன் தாமஸ், ஷாப்டரைச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவருக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பியுள்ளார்.
மரணத்திற்கான காரணம்
ஷாப்டர், பிரையன் தோமஸை பொரளை மயானத்திற்கு அழைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது முயற்சி வெற்றியளிக்கவில்லை என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரையன் தோமஸ் ஷாப்டர் அனுப்பிய சில செய்திகள் நீக்கப்பட்டிருப்பதும் நீதிமன்றத்தில் தெரியவந்தது.
பின்னர் தினேஷ் ஷாப்டரின் பிரேத பரிசோதனை அறிக்கை கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் வாசிக்கப்பட்டது.
அதில் அவர் கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழக்கவில்லை என்றும், சயனைட் உடலுக்குள் கலந்ததால் மரணம் ஏற்பட்டதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மரணத்திற்கான காரணம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட மருத்துவ சாட்சியங்கள் முரண்பாடானவை என ஷாப்டர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
ஒரே மருத்துவர் இரண்டு தடவைகள் மரணத்திற்கு இரண்டு காரணங்களை கூறியதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.