தற்போதைய நாட்களில் இன்புளுவன்சா மற்றும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் ஆலோசகர் மருத்துவர் நந்தன திக்மதுகொட தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
இந்த நோய் தாக்கம் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்களுக்கு அதிக ஆபத்து.எனவே அறிகுறியுள்ளவர்கள் தாமதமின்றி மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நோய் அறிகுறிகள்
தற்போது பரவி வரும் இன்புளூவன்ஸா மாறுபாடு சுவாச மண்டலத்தை பாதிக்கின்றது. இது ஆபத்தானது.வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், தொண்டை வலி மற்றும் சில சமயங்களில் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.சிலருக்கு சில நாட்களில் குணமடைந்தாலும், சிலருக்கு நீடித்த இருமல் மற்றும் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம்.
கர்ப்பிணி தாய், 70 அல்லது 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டால், அது உயிருக்கு ஆபத்தானதாக அமையும். அத்தகையவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும்.
மருந்துகளை உட்கொள்வதை தவிர்க்கவும்
அதிக காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் சோர்வுடன் இருந்தால், டெங்கு காய்ச்சலும் இந்த நாட்களில் வேகமாக பரவி வருவதால், பரசிட்டமோல் தவிர வேறு மருந்துகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
பொதுவாக எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோய் பரவி வருவதாகவும், நெல் வயல்களில் வேலை செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.