2023ஆம் ஆண்டில் மாணவர் விசா பெறுவது கடினம் என்னும் தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட பணி செய்யும் திறனும் அனுபவமும் உடையவராக இருந்தாலும், அவருக்கு பட்டப்படிப்பு கட்டாயம் தேவை என்னும் ஒரு நிலைமை இருந்து வருகிறது.
அடுத்த ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மாற்றம்
ஆனால், அடுத்த ஆண்டிலிருந்து, அதாவது, 2023ஆம் ஆண்டிலிருந்து, ஒரு சர்வதேச மாணவர் பல்கலைப் பட்டப்படிப்பை முடிக்கும் முன்பே பணி விசா பெறும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனை மையமாகக் கொண்டு இயங்கி வரும் விசா மற்றும் புலம்பெயர்தல் நிபுணரான Yash Dubal என்பவர் இந்த மாற்றம் குறித்துக் கூறும்போது, படித்து முடித்த பின்பும் பிரித்தானியாவிலேயே தங்கி பிரித்தானியாவின் பொருளாதாரத்துக்குத் தங்கள் பங்களிப்பைச் செய்ய விரும்பும் சர்வதேச மாணவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை அகற்ற பிரித்தானிய அரசு நடவடிக்கைகள் எடுத்துவருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றம், சர்வதேச மாணவர்களுக்கு பணி வாய்ப்புக்களை ஏற்படுத்துவதுடன், பிரித்தானியாவுக்கு திறன்மிகு பணியாளர்கள் கிடைப்பதற்கும் வழிவகை செய்யும் என்றும் கூறியுள்ளார் அவர்.