சீனாவின் மோசமான நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவன தலைவர்!

எதிர்பாராத விதமாக சீனாவில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கடந்த அக்டோபர் முதல் கோவிட் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்தது.

மக்கள் போராட்டம்
கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, சமீபத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இந்த நிலையில், சீனாவில் கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது. கோவிட் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

மேலும், சுவாசப் பிரச்சினை காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, மருத்துவமனையின் ஒரே அறையில் 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறும் நிலை உள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலக சுகாதார நிறுவனம்
இந்நிலையில், எதிர்பாராத விதமாக சீனாவில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சீன அரசு கரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதுபோல் மருத்துவமனையில் நோயாளிகள் அதிகமாகும் விகிதம், இறப்பு விகிதம், தீவிர சிகிச்சைக்கான தேவை குறித்த விவரங்களை பகிருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவுக்கு தேவையான உதவிகளை செய்ய உலக சுகாதார நிறுவனம் தயாராக உள்ளது என்றார். அதேபோல் உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால பிரிவு தலைவர் மைக்கேல் ரயான், இப்போது பரவும் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் ஊரடங்கு தாண்டி பல்வேறு நடவடிக்கைகளையும் உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor