கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் பணப்பைகள், கையடக்க தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள் என்பன திருடப்பட்டு வருகின்றமையினால் வைத்தியசாலையில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையை சுற்றித்திரியும் போதைக்கு அடிமையானவர்கள் நோயாளர்களின் உடமைகளை திருடுவதாகவும், சிலர் வைத்தியசாலையில் தாதியர் போன்று உடை அணிந்து வந்து திருடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தினமும் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருவதால் வைத்தியசாலையில் தற்போதுள்ள பொலிஸ் நிலையத்திற்குப் பதிலாக மற்றுமொரு பொலிஸ் பிரிவை அமைக்குமாறு வைத்தியசாலை அதிகாரிகள் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் மா அதிபர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தும் அவர்கள் அதனைத் தவிர்த்து வருவதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை
இதனையடுத்து, வைத்தியசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொது பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திருட்டுச் சம்பவங்களுக்கு வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்களும் துணைபோவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் செய்தும் இதுவரை போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு திருட்டில் ஈடுபட்ட பலரை வைத்தியசாலை ஊழியர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நோயாளர்களில் திருட்டு சம்பவங்கள்
இது தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே. விக்கிரமசிங்க தெரிவிக்கையில்,
வைத்தியசாலை வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களில் திருட்டு சம்பவங்கள் அவ்வப்போது பதிவாகி வருவதாகவும், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வந்து தகவல்களை பதிவு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் போதைப்பொருள் பாவனையாளர்களா அல்லது வேறு ஏதேனும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவால் திருடப்பட்டதா என்பது தமக்கு தெரியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.