இலங்கையில் நிலவும் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, நிவாரணப் பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளது.
இந்த அதிகரித்த நிதியுதவியின் கீழ், நிவாரணப் பொருட்களை ஏற்றிய ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான பிரம்மாண்டமான போயிங் – 747 – 400 (Boeing – 747 – 400) சரக்கு விமானம் இன்று (17) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விசேட விமானம் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளான ஜெர்மனி மற்றும் லக்சம்பர்க் ஆகியவற்றிலிருந்து பின்வரும் உதவிகள் கொண்டு வரப்பட்டன:
ஜெர்மனியிலிருந்து 05 இலட்சம் யூரோ பெறுமதியான அனர்த்த நிவாரணப் பொருட்களும்
லக்சம்பர்க்கிலிருந்து மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்ட கூடாரங்கள் (Tents), சமையல் உபகரணங்கள், மெத்தைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் அடங்குகின்றன.
இந்த நிவாரணப் பொருட்களை இலங்கையிலுள்ள ஜெர்மன் தூதரகத்தின் பிரதித் தூதுவர் சாரா ஹசல்பாத் (Sarah Hasselbarth), ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் ட்ரிபோன் (Pierre Tripon) மற்றும் இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று பெற்றுள்ளனர்.

