‘டித்வா’ (Ditwah) சூறாவளி தொடர்பான முன்னெச்சரிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ, உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதற்கு எதிராக ஊடக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், பொதுமக்களுக்கு வெளியிடப்படும் உத்தியோகபூர்வ தகவல்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தினார்.
அத்துடன், இது குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் அவர் நிராகரித்தார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:
”தேவையென்றால் அவர்கள் நீதிமன்றத்திற்குச் செல்லலாம். சில ஊடக நிறுவனங்கள் எவ்வாறு காணொளிகளைத் தொகுத்து, சிதைத்து வெளியிட்டன என்பதை எம்மால் அங்கு நிரூபிக்க முடியும். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பல தொலைக்காட்சி கலந்துரையாடல்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கை மூலம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களின் ஒரு பிரிவினரால் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் மக்களை திசைதிருப்பும் வகையிலானவை.”
சூறாவளி தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் வானிலை ஆய்வுத் திணைக்களத்தினால் நவம்பர் 25ஆம் தேதியே வெளியிடப்பட்டன. அதற்கு முன்னரே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் அடிப்படையற்றவை
23 சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர், இதில் 19 எச்சரிக்கைகள் நவம்பர் 27ஆம் தேதிக்குப் பின்னரே விடுக்கப்பட்டவை என்பதை இடர் மேலாண்மை நிலையத்தின் தரவுகள் மூலம் உறுதிப்படுத்த முடியும் என்றார்.
நவம்பர் 25 காலை வரை அலைவரிசை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவே இருந்தது. அது நவம்பர் 27 அன்றே சூறாவளியாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டது.
தவறான செய்திகளைத் தொடர்ந்து வெளியிடும் ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என எச்சரித்த அமைச்சர், இவ்வாறான போலித் தகவல்கள் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

